மிசோரம் மக்களின் நீண்ட கால கனவு: முதல் முறையாக ரயில் இணைப்பைப் பெரும் மாநில தலைநகரம்!

By : Bharathi Latha
மாநில தலைநகராக இருந்தும் ரயில்வே வசதியே இல்லாத, மிசோரம் தலைநகர் ஐஸ்வால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும் என ரயில்வே அதிகாரிகள் கூறினார். சுமார் 51. 38 கி.மீ நீளமுள்ள அகல பாதை ரயில் பாதையை சைரங் மற்றும் பைராபிக்கு இடையில் மிசோரம்-அசாம் எல்லையில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இது 2023 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைரங் ஐஸ்வாலிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது.
வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரி கூறுகையில், "பல்வேறு கட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன மேலும் பல்வேறு பணிகளுக்கான அனைத்து டெண்டர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 89.55 சதவிகித களப்பணிகள், 37 சதவீத பெரிய பால பணிகள் மற்றும் சுமார் 73.26 சிறு பால பணிகள் நிறைவடைந்துள்ளன" என்று அவர் கூறினார். வெட்டு மற்றும் கவர் சுரங்கப்பாதைகள் அமைப்பதில் 21 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.
மிசோரம் தலைமைச் செயலாளர் லால்னுன்மாவியா சுவாங்கோ நேற்று இந்த ரயில் பாதையின் பல்வேறு கட்டுமான இடங்களை பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடினார். அவர் NFR அதிகாரிகளுடன் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் கட்டுமானத்தை விரைவுபடுத்துமாறு அவர்களை வலியுறுத்தினார்.
கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்க மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சுவாங்கோ உறுதிப்படுத்தினார். இந்த திட்டம் நிறைவடையும் போது மாநிலத்தின் பயன்படுத்தப்படாத பொருளாதார திறன் வெளியே வரும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். சைரங்-பைராபி அகல பாதை பாதைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் 2014 நவம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் 2018 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
மலைப்பாங்கான நிலப்பரப்பு, ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் அடிக்கடி நிலச்சரிவுகள், பருவமழை காரணமாக வேலை பருவத்தின் குறுகிய காலம் மற்றும் மாநிலத்தில் தொழிலாளர் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல தடைகள் காரணமாக இந்த திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை.
இந்த திட்டம் நிறைவடையும் போது மிசோரம் மக்களுக்கு நல்ல பொருளாதார வாய்ப்புக்கு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பாதை செயல்பாட்டுக்கு வரும்போது, பொருட்கள் மிகவும் மலிவான, செலவு குறைந்த மற்றும் சூழல் நட்பு வழிகளில் கொண்டு செல்லப்படும். மேலும் மாநில விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பல்வேறு மாநிலங்களின் பரந்த சந்தைக்கு மலிவான விலையில் சரியான நேரத்திற்குள் அனுப்ப முடியும்.
