கொரோனாவை வெற்றி கொள்ள இந்தியாவிற்கு பக்க பலமாக இருக்கும் இந்திய விமானப்படை!

By : Bharathi Latha
கொரோனா வைரஸ் பாதிப்புகளினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, மத்திய அரசாங்கத்துடன் விமானப்படை கைகோர்த்து ஒன்றாக செயல்பட இருக்கிறது. எனவே நிவாரண நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக, மேலும் எந்த நேரத்திலும் உதவிகரமாக இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது என்று பிரதமரிடம் இந்திய விமானப்படை தளபதி பதூரியா தெரிவித்தார்.
வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் மற்றும் அறிவுரைகளையும் தன்னுடைய மக்களுக்கு வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், பிரதமர் அவர்கள் இந்திய விமானப்படையின் தளபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறிய செய்தி என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விமானப்படையின் பங்களிப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றும், மேலும் நாட்டுக்கு உதவ விமானப்படை தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் சப்ளை ஆகியவற்றை எடுத்துச் செல்லக் கூடிய வகையில் சிறிய மற்றும் நடுத்தர, பெரிய விமானங்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது என்றும், மேலும் அத்தியாவசிய பொருட்களின் குறிப்பாக மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விமானப்படை தக்க நேரத்தில் உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
