டெல்லியில் அரசு இயந்திரம் செயலிழந்தது! கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

By : Muruganandham
டெல்லியில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த 1 மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தினசரி ஏற்பட்ட கொரோனா உயிர் பலிகளால், மருத்துவர் விவேக் ராய் கடுமையான மன அழுத்தத்தால் இருந்துள்ளார். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக, அவருடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவி வாந்தேத்கர், கொரோனா முன்களப்பணியாளர் பல உயிர்களைக் காப்பாற்றிய விவேக் ராய், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், தினசரி பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
