ஊசி போடாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக வரும் எஸ்.எம்.எஸ் - தவறுகளைக் குறைப்பதற்காக கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம்!

By : Muruganandham
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, கோவின் இணையதளம் மூலம் முன் பதிவு செய்பவர்களில் சிலர், குறிப்பிடப்பட்ட தேதியில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்.எம்.எஸ் செய்தி வந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போது, தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர், முன்பதிவு செய்த நபரை, தடுப்பூசி போட்டதாக கம்ப்யூட்டரில் தவறாக பதிவு செய்தது காரணம் என தெரியவந்தது.
இது போன்ற தவறுகளையும், இதைத் தொடர்ந்து மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையும் குறைப்பதற்காக, கோவின் இணையதளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்படுகிறது. மே 8ஆம் தேதி முதல், கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 4 இலக்கப் பாதுகாப்பு எண் வழங்கப்படும்.
பயனாளி தகுதியான நபரா என சரிபார்த்த பின், தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, பயனாளியிடம் 4 இலக்கப் பாதுகாப்பு எண்ணை தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர் கேட்டு, கோவின் இணையதளத்தில் அதனைப் பதிவு செய்வார். இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்டதை சரியாகப் பதிவு செய்ய முடியும்.
தடுப்பூசி போட ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் பொருந்தும். தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் சீட்டில் இந்த 4 இலக்கப் பாதுகாப்பு எண் அச்சிடப்படும்.
இது தடுப்பூசி போடும் ஊழியருக்கு தெரிவிக்கப்படாது. வெற்றிகரமாக முன்பதிவு செய்தபின், உறுதி செய்யப்படும் எஸ்.எம்.எஸ் தகவலில் இந்த 4 இலக்க எண் அனுப்பப்படும். இந்த ஒப்புதல் சீட்டை செல்போனில் சேமித்து வைத்தும் காட்டலாம்.
ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா, இல்லையா என்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆள்மாறாட்டம், தவறான பதிவுகள் போன்றவை குறையும்.
