டெல்லியில் இரண்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலையை நிறுவிய இ.எஸ்.ஐ.சி!
By : Shiva
தலைநகர் டெல்லியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிறுவியுள்ளது.
டெல்லி பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்துக்கு 440 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜில்மில் பகுதியில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 220 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்துள்ளது. இந்த இரு மருத்துவமனைகளில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலை அமைப்பதன் மூலம் மருத்துவமனைகளில் உள்ள ஐசியு மற்றும் வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் இருக்கும் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்தியேக மருத்துவமனைகளாக மாற்றும் நடவடிக்கையில் இ.எஸ்.ஐ.சி தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் மூலம் இந்த மருத்துவமனைகளில் 300 ஐசியு படுக்கைகள் மற்றும் 250 வென்டிலேட்டர் படுக்கைகள் உட்பட 4200 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளதா என்பதை அறியும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இந்த சாதனையை அடைந்ததற்காக இஎஸ்ஐசி மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய இணையமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நோய் தொற்று காலத்தில் முன் களப்பணியாளர்கள் தார்மீக நெறியை பின்பற்றி மனிதகுலத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.