ஆக்சிஜன் பற்றாக்குறையே ஏற்படாத வகையில் புதிய திட்டம்: மத்திய அரசு தகவல்!

இந்தியர்கள் தற்போது உள்ள நிலையில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் முப்படை மற்றும் ரயில்வே துறையும் இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளன. தற்போது புதிதாக சாலை வழியில் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி உள்ளது. இதில் ஆக்சிஜன் வினியோகத்தை பெருக்க புதிதாக தேர்வு செய்யப்பட்ட 500 டேங்கர் லாரி டிரைவர்களுக்கு தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்களை தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் கூடுதல் செயலாளர் பியூஸ் கோயல் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "நாட்டில் ஆக்சிஜன் வினியோகத்தை பெருக்க மத்திய உள்துறை அமைச்சகம் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, 5,805 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பணி நடந்து வருகிறது. இவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் 3,440 டன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவு உள்ளது. எங்கெங்கு ஆக்சிஜன் உள்ளதோ, அவற்றை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்தும் திட்டமும் தற்போது அமலில் இருக்கிறது" என அவர் கூறினார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை தேவைப்படும் இடத்திற்கு டேங்கர்கள் மூலம் எடுத்துச்செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த ரெயில்வே, விமானப்படை ஆகியவற்றின் சேவையும் பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை விமானப்படை விமானங்களில் எடுத்துச்செல்ல முடியாது. எனவே, காலி டேங்கர்கள் மட்டும் விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவுக்குள் 374 காலி டேங்கர்களும், வெளிநாடுகளில் இருந்து 81 டேங்கர்களும் விமானப்படை விமானங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1,252 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும், 835 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.