கேரளாவில் சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடமில்லை - முதல்வரின் மருமகனுக்கு அமைச்சர் பதவி!
By : Shiva
கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜாவிற்கு பொறுப்பு வழங்கப்படாமல் முதலமைச்சரின் மருமகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினராகிய சைலஜா. இவர் கொரோனா மற்றும் நிபா வைரஸ் தாக்கத்தின் போது மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று உலக அளவில் பேசு பொருளாக இருந்தார். பல சர்வதேச ஊடகங்கள் இவரது செயல்பாடுகளைப் பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டன.
இந்த அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் புது முகங்களாக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனால் தற்போது பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்று நம்பப்பட்ட சைலஜாவிற்கும் அமைச்சர் பொறுப்பும் அளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அமைச்சர்களும் புதுமுகங்களாக இருக்க வேண்டும் என்னும் பட்சத்தில் சைலஜாவிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டால் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
எம்.வி.கோவிந்தன்,
கே.ராதாகிருஷணன், கே.என்.பலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ் மற்றும் வி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந்த அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் ஆவார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி தேசியத் தலைவர் ரியாஸ் முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் டீச்சர் என்று அழைக்கப்பட்ட சைலஜாவிற்கு இடம் இல்லாமல் முதலமைச்சரின் மகனுக்கு இடம் கிடைத்துள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.