கொரோனா தடுப்பூசிக்குப்பின் இரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறைதல் சம்பவங்கள் இந்தியாவில் மிகக் குறைவு!

By : Muruganandham
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட பின், இரத்தப் போக்கு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது மிகக் குறைவு என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில், எதிர்ப்பு மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழு (AEFI) தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த அஸ்ட்ராஜெனிகா (இந்தியாவில் கோவிஷீல்டு) தடுப்பூசி போட்ட பின்பு, ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதாக சில நாடுகளில் கடந்த மார்ச் 11ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் இந்த பாதகமான விளைவு குறித்து விரிவான பகுப்பாய்வை உடனடியாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதிவரை நாட்டில் 75,435,381 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், இவற்றில் கோவிஷீல்டு - 68,650,819; கோவாக்சின் 6,784,562 என ஏஇஎப்ஐ குழு தெரிவித்தது.
10 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதில், 9.3 பேர் என்ற அளவில் மோசமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட 498 பேரின் மருத்துவ அறிக்கையை ஏஇஎப்ஐ குழு விரிவாக ஆய்வு செய்து முடித்துள்ளது. இவர்களில் 26 பேருக்கு மட்டுமே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டபின் ரத்தம் உறைதல் அல்லது ரத்தப் போக்கு மூலம் மற்றொரு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட சாத்தியமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பத்து லட்சம் பேருக்கு 0.61 என்ற அளவில் உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டபின்பு இரத்தம் உறைதல் சம்பவம் நடந்ததாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ரத்தம் உறைதல் சம்பவம் மிகக்குறைவு, ஆனால் உறுதியான சம்பவங்கள் நடந்துள்ளன என இந்தியாவில் ஏஇஎப்ஐ தரவுகள் காட்டியுள்ளன. இந்தியாவில் இந்த பாதிப்பு 10 லட்சம் டோஸ்களுக்கு 0.61 என்ற அளவில் உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒழுங்குமுறை அமைப்பான மருத்துவம் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்த அளவுகோலான 10 லட்சம் பேருக்கு 4 என்ற அளவைவிட, இந்தியாவில் நடந்த சம்பவங்களின் அளவு குறைவு. 10 லட்சம் டோஸ்களுக்கு 10 ரத்தம் உறைதல் சம்பவங்கள் நடந்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
ரத்தம் உறைதல் சம்பவம் மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுகிறது. ஆனால், ஐரோப்பிய மக்களுடன் ஒப்பிடுகையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு 70 சதவீதம் குறைவு என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
