இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்!
By : Shiva
கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இறப்பு சதவிகிதமும் வெகுவாக குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா பாதிப்பு குறித்து கடந்த வாரத்திற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 48 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 86 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்பு கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 12% குறைவாகும். மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 5 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வாரத்தில் 23,87,663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் குறைவாகும். உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 13 சதவீதம் குறைந்துள்ளது என்று இது குறித்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் வரும் காலங்களில் இந்த பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மேலும் குறையும் என்று நம்பப்படுகிறது. பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் நோய் தொற்றிலிருந்து நாம் விரைவாக வெளிவர முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் அதிகம் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.