தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சர் தகவல்!

By : Bharathi Latha
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. எனவே தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொற்றுநோயை சமாளிக்க, தடுப்பூசிகளை தயாரிக்க அதிக மருந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
"தடுப்பூசி தேவை மிகவும் அதிகமாக இருப்பதால் அதனுடைய உற்பத்தியும் அதிகரித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளோம். ஒன்றுக்கு பதிலாக, மேலும் 10 நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்கப்படும். அவை நாட்டில் தடுப்பூசி தயாரித்து வழங்கும். பின்னர் உபரி இருந்தால் அவை ஏற்றுமதி செய்யலாம்" என்று கட்கரி ட்வீட் செய்துள்ளார்.
கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் V ஆகியவை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள மூன்று தடுப்பூசிகள் ஆகும். கோவாக்சின் என்பது ஒரு உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் இதை தயாரிக்கிறது.
புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(SII) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் உள்ளூர் பதிப்பான கோவிஷீல்ட்டை உற்பத்தி செய்கிறது. ஸ்புட்னிக் V ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் நாட்டில் பரவலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
