இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று - மத்திய அரசு துரித நடவடிக்கை..!
By : Shiva
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிக பரிசோதனைகள் செய்யப்பட்ட போதிலும் குறைவான மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டில் கடந்த 20 நாட்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக 24 மாநிலங்கள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னும் கொரோனா தொற்று குறைந்த அளவிலேயே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி முதல் தவணையில் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையில் வேறு ஒரு தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இருந்தபோதிலும் இது குறித்து ஆராய வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை முற்றிலும் தவறானவை என்று நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை கூடிய விரைவில் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் செய்தி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.