ஜம்மு காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் - விரைவில் பூமி பூஜை!

By : Bharathi Latha
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றால் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் வட மாநிலத்தில் அதுவும் ஜம்மு, காஷ்மீரில் விரைவில் அமைய உள்ள ஏழுமலையான் கோவில் பற்றி தகவல்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஏழுமலையான் கோவில், பக்தர்களுக்கான வேதபாட சாலை, தியான மையம், குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் போன்றவை விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஜவஹர் தலைமையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வரும் 13 ஆம் தேதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஜம்முவில் கட்டப்படும் கோவில் குறித்து தேவஸ்தான பொறியாளர்கள் பவர் பாயிண்ட் மூலம் கோவில் முகமண்டபம், சுவர், பக்தர்கள் ஓய்வு விடுதி, சுவாமி வாகன மண்டபம், அர்ச்சகர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் கோவில் கட்டும் பணிகளை 2 கட்டங்களாக பிரித்து செய்ய வேண்டும். கோவில் வளாகத்தில் உள்ள கட்டுமானங்களும் கற்களால் செய்யப்பட வேண்டும். கோவில் சுற்று சுவர் உயரமாக இருக்கும்படி கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு செயல் அதிகாரி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை விரைவில் நடக்கும் படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
