இந்தியாவின் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி - இறக்குமதிக்கு பிரேசில் ஒப்புதல்!

By : Bharathi Latha
உலகளவில் அதிகரித்து வரும் தொற்றுக்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு நாடுகள் தங்களுடைய மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரேசில் அரசு இதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும் பணிகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டிருந்தது. இருப்பினும், அப்போது சில காரணங்களை கூறி பிரேசில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தேசிய சுகாதார ஒழுங்கு முறை அமைப்பான அன்விசா அந்த கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில், தற்பொழுது கோவாக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
கோவாக்சின் இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் முதற்கட்டமாக 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. பிரேசிலில் கடந்த சில நாட்களாக அதிகரிக்கும் தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால், மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
