ராமர் கோவில் நிலம் தொடர்பாக அறக்கட்டளைக்கு ஆதரவாக நிற்கும் சிவசேனா!
By : Shiva
ராமர் கோவில் அறக்கட்டளை நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் அறக்கட்டளைக்கு ஆதரவாக சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது
தொடர்ச்சியான பொய்ப் பிரசாரங்கள் மூலம் மக்களை எப்படியாவது தங்கள் வசம் இழுத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுகின்றது. ராமர் கோவில் நிலம் வாங்குவதில் மோசடி நடந்துள்ளதாக தற்போது மீண்டும் ஒரு பொய் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இதற்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டு எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் ராமர் கோவில் கட்டி வரும் ராம் மந்திர் அறக்கட்டளைக்கு சிவசேனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. ராம் மந்திர் அறக்கட்டளை அளித்துள்ள அனைத்து பதில்களும் சரியாக உள்ளன என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பவன் பாண்டே ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அறக்கட்டளை உறுப்பினர் அனிலின் உதவியுடன் ராமர் கோயில் வளாகத்திற்கு ரூ 2 கோடி மதிப்புள்ள நிலத்தை சம்பத் ராய் ரூ 28.5 கோடி விலையில் வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது அங்குள்ள சந்தை விலையை விட குறைவாகவே ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கப்பட்டு உள்ளதாக தெளிவுபடுத்தி இருந்தது. எனவே இவை அனைத்தும் சரியாகவே உள்ளது என்று ராமர் கோவில் அறக்கட்டளைக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.