கொரோனாவின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது - எய்ம்ஸ் இயக்குனர் 'ஷாக்'!

உலகில் பல நாடுகளில் தற்பொழுது கொரோனாவின் மூன்றாவது அலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இரண்டாவது அலையைத் தொடர்ந்த, மேலும் மூன்றாவது அலை வருவதை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் கூறியுள்ளார். கொரோனாவின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது எனவும், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. மீண்டும் கூட்டங்கள் கூடுகிறது. மக்கள் ஒரே இடத்தில் சேர்கின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்கக்கூடும். மூன்றாவது அலை நமது நாட்டில் தவிர்க்க முடியாததாகி விட்டது.
இனி வரும் அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் மூன்றாவது அலை துவங்கும். இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகலாம். இது நாம் எப்படி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை பொறுத்தது. தடுப்பூசி போடுவது சவாலாக இருக்கும். ஒரு அலை உருவாக, பொதுவாக 3 மாதங்கள் ஆகும். ஆனால், பல காரணிகளை பொறுத்து குறைந்த காலத்திலும் அந்த அலை உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த முறை, புதிய உருமாறிய வைரஸ், வெளியில் இருந்து வந்து இங்கு பரவியது. இதனால், அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பூசி போடாவிட்டால், நாம் எளிதில் பாதிக்கப்படுவோம். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால், நாம் கவனமுடன், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.