பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று நேரில் ஆலோசனை!
By : Parthasarathy
பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இதுவரை மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்படவுமில்லை, அதை மாற்றியமைக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி, நேற்று டெல்லியில் மூத்த மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை நேரில் சந்தித்தார்.
மத்திய மந்திரிசபையில் இருந்து ஏற்கனவே சிவசேனா, சிரோமணி அகாலிதளம் மந்திரிகள் விலகி உள்ளனர். பா.ஜ.க வின் கூட்டணி கட்சிகளில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே பதவி வகிக்கிறார். மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகிய இருவரும் மரணம் அடைந்த நிலையில் மத்திய மந்திரிசபையில் பல காலி இடங்கள் உள்ளன. மூத்த மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மந்திரிசபை விஸ்தரிப்பு நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனை நடந்து இருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.