மோசடியில் ஈடுபட்ட மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியின் சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்!
By : Parthasarathy
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர், வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இவர்களின் மோசடி செயலால், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு 22,585.83 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
இந்திய வங்கிகளில் பண மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் புகுந்தனர். மேலும் மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவிற்கு தப்பி சென்றார். அவர் அங்கிருந்து கியூபாவிற்கு தப்ப முயன்ற போது டொமினிக்காவில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை, லண்டன் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் லண்டன், தப்பி சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியும் இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர் நாடு கடத்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, மோசடி விவகாரத்தில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.22,585,83 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க்துறை முடக்கியிருந்துது. இது, வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 80.45 சதவீதம் ஆகும். இவற்றில், ரூ.9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.