காஷ்மீரின் சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சி தலைவர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை!
By : Parthasarathy
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்தது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நாளை பிரதமர் மோடியின் இல்லத்தில், காஷ்மீரில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடக்கவுள்ளது.
மத்திய அரசு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தந்தை எதிர்த்து காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கார் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை (Corona Negative) என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது.