கொரோனா தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை : எங்கு தெரியுமா?

By : Bharathi Latha
தற்போது இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி தான் ஒரேவழி என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட ஒரு உண்மையாகும். அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன. எனவே தடுப்பூசி திருத்திக் கொள்வதில் முன் உதாரணமாக அரசுப் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் அதிரடியான சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங், தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் மாத சம்பளம் கொடுக்கப்படாது என தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால்தான், அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.
மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி, அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவலையும் சமர்ப்பிக்கும்படி பல்வேறு துறை தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்கள் குறித்து ஆராய்ந்தபோது, அவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்தே மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
