'காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்த உறுதியாக உள்ளோம்' : அமித்ஷா திட்டவட்டம்!
By : Parthasarathy
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்யப்பட்டு அதை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கிடையில், காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று காஷ்மீரின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சியினரை உள்ளிடக்கிய குப்கர் கூட்டணியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு பல கட்சி தலைவர்கள் பல மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், காஷ்மீர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜம்மு-காஷ்மீர் குறித்து இன்று சுமூகமான சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்றது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான தங்கள் உறுதிப்பாட்டை அனைவரும் வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக வழிமுறையை வலுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் அனைத்து கட்டங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி தொகுதி வரையறையும், அமைதியான முறையிலான தேர்தலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது போன்றவை மிக முக்கியமான மையில்கற்கள் ஆகும்." என தெரிவித்துள்ளார்.