பெங்களூரு: ஒரே சமயத்தில் கருப்பு, பச்சை பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்!

By : Bharathi Latha
தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வரும் பூஞ்சை தொற்றுகளுக்கு மத்தியில் கொரோனா பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் மூலமாக அவர்களுக்கு பூஞ்சைத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் ஒரே சமயத்தில் பல்வேறு பூஞ்சை தொற்றுகளுக்கு பாதிக்கப்படுவது மிகவும் அரிதுதான் அந்த வகையில் தற்போது மருத்துவர் ஒருவருக்கு கருப்பு மற்றும் பச்சை போன்ற தொற்றுக்கள் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த நிலையில் அவருக்கு கருப்பு மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் கார்த்திகேயன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் அவருக்கு முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. தாங்க முடியாத தலைவலி, மூக்கில் நீர் ஒழுகுதுல் போன்றவை ஏற்பட்டு மைசூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது மூக்குப் பகுதியில் பச்சை நிறத்தில் உப்புத் துகள் போன்றவை உருவாகியிருந்தன.
இதைப் பரிசோதித்ததில் அது பச்சை பூஞ்சை எனத் தெரிய வந்தது. அவரது மூக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து, பூஞ்சை பாதித்த பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன் நீரிழிவு இல்லை. அதன் பின் நீரிழிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது உரிய நேரத்தில் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். அவரது கண் மற்றும் மூளையைப் பாதித்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
