இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பிலிப்பைன்ஸ் அனுமதி!
By : Parthasarathy
கொரோனா வைரஸை முறியடிக்க நமது நாட்டிலே கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'பாரத் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்சின்' தடுப்பூசி மத்திய சுகாதாரத்துறையின் அங்கீகாரத்தைப் பெற்று தற்போது நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பொதுமக்களுக்கு செலுத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் இயக்குனர் ரோலாண்டோ என்ரிக் டொமிங்கோ கூறுகையில் "அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிலிப்பைன்சில் கோவேக்சின் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.