டெல்டா பிளஸ் வைரஸ் பரவலின் எதிரொலி - கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த புனே நகரம்!

By : Bharathi Latha
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக புனே மாநகராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வந்த தளர்வுகள் முன்பு இருந்தது போன்று தற்போதைய முறையில் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்பொழுது நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. புனேயில் மாலை 5 மணிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புனே மாநகராட்சி கமிஷனர் விக்ரம் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை முதல் புனே நகரில் மாலை 5 மணி வரை 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் அவசர காலத்திற்கு மட்டும் ஒருவர் மட்டும் வெளியே செல்ல முடியும். அத்தியாவசிய கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் மாலை 4 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது போன்ற பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன. எனவே தற்போது உருமாறி உள்ள டெல்டா ப்ளஸ் வைரஸ் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் முக்கியமான முடிவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றன.
