Kathir News
Begin typing your search above and press return to search.

"பெற்றெடுத்த தாயும், பிறந்த இடமும் சொர்க்கத்தை விட மேலானது" - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி!

பெற்றெடுத்த தாயும், பிறந்த இடமும் சொர்க்கத்தை விட மேலானது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி!

ParthasarathyBy : Parthasarathy

  |  28 Jun 2021 11:03 AM GMT

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தான் பிறந்த ஊரான பரன்க் கிராமத்தை காணவும், தன் பள்ளித் தோழர்கள், உறவினர்கள் ஆகியோரை சந்திக்கவும் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தான் பிறந்த ஊருக்கு சென்றார். பரனக் கிராமம் வந்த இந்தியா ஜனாதிபதியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் வரவேற்றனர். அப்போது ராம்நாத் கோவிந்த் தான் பிறந்த ஊருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்த ஊர் மண்ணை தொட்டு வணங்கினார்.


பின்னர் அங்கு தனது குடும்பத்தினர் சார்பில் அந்த கிராமத்து முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசும்போது "பிறந்த இடத்திற்கான மகிழ்ச்சியையும், பெருமையையும் கூறுவதென்றால், பெற்றெடுத்த தாயும், பிறந்த இடமும் சொர்க்கத்தை விட உயர்ந்தது ஆகும். இந்த தாய்மண் கொடுத்த ஊக்கத்தால் உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்தில் இருந்து மாநிலங்களவைக்கும், மாநிலங்களவையில் இருந்து ஆளுநர் மாளிகைக்கும் பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி மாளிகைக்கும் சென்றுள்ளேன்.

ஆனால் எங்கு நான் தங்கினாலும், எனது கிராமத்தின் மண் வாசனையும், எனது வாழ்வின் நினைவலைகளும் எப்போதும் எனது உள்ளத்தில் இருக்கும். என்னை பொறுத்தவரை பராங், வெறும் ஒரு கிராமம் மட்டுமல்ல, இது எனது தாய்மண். வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளை எட்டுவதற்கும், நாட்டுக்கு சேவை புரிவதற்கும் இந்த மண்தான் உத்வேகம் அளித்தது.


சாதாரண கிராமத்தை சேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிறுவன், இவ்வளவு பெரிய பொறுப்புகள் மிகுந்த நாட்டின் உயர் பதவியை அடைவேன் என ஒருபோதும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் நமது ஜனநாயக அமைப்பு இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அரசியல்சாசனத்தை வடிவமைத்தவர்களை, தங்கள் மதிப்பற்ற தியாகம் மற்றும் பங்களிப்புக்காக நான் வணங்குகிறேன். உண்மையில் இன்று நான் இங்கே வந்திருக்கிறேன் என்றால், அதற்காக இந்த கிராமத்தின் மண் மற்றும் உங்களின் அன்பு, ஆசீர்வாதத்துக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

இந்த கிராமத்தின் மிகவும் மூத்த ஆண் மற்றும் பெண், அவர்கள் என்ன சாதியோ, இனமோ, பிரிவையோ சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவிப்பது எங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் ஆகும். மூத்தவர்களை மதிக்கும் இந்த வழக்கம் தற்போதும் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர், குருக்கள் மற்றும் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது கிராமப்புற கலாசாரத்தில் தெளிவாக உள்ளது.

தடுப்பூசி போட்டு கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் கவசமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. நானும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டு கொன்டேன், எனவே நீங்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு அடுத்தவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்." என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News