'அரசு சொத்தை அழிப்பது, நம் சொத்தை அழிப்பது போன்றது' : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை!
By : Parthasarathy
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள, தான் பிறந்த பரன்க் கிராமத்திற்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி தான் பிறந்த கிராம மக்களிடம் உரையாற்றினார். இதனை தொடர்ந்து நேற்று அவர் லக்னோவ் வந்து அடைந்தார், அப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அந்தமானில் ஆளுநர் லக்னோவ் ரயில் நிலையத்தில் இந்திய ஜனாதிபதியை வரவேற்றனர். பின்பு லக்னோவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஜனாதிபதி கூறுகையில் தான் பெரும் மாத சம்பளம் 5 லட்சம் ரூபாயில், 50 சதவீதத்திற்கு மேல் வரி செலுத்துவதாக தெரிவித்தார்.
லக்னோவ் ஆளுநர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில் " சில ரயில்கள் ஒரு நிலையத்தில் நிற்காமல் சென்றால் நமக்கு கோபம் வருகிறது. ஒரு சிலர், ரயிலை சேதப்படுத்தி தீ வைக்கும் அளவிற்கு வன்முறையில் இறங்கி விடுகின்றனர். கேட்டால் 'அரசு ரயில்தானே' என்பர். அது, வரி செலுத்துவோரின் சொத்து என்பதை அவர்கள் அறிவதில்லை. வரி வருவாய் உள்ள அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.இந்த நேரத்தில் ஒன்றை சொல்வதில் தவறு இல்லை என நினைக்கிறேன்.
நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் எனக்கு, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. ஆனால் என் சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல், அதாவது, மாதம் 2.75 லட்சம் ரூபாயை வரி செலுத்துகிறேன். வரி போக எஞ்சுகின்ற சேமிப்பை விட, அதிக ஊதியத்தை அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் வாங்குகின்றனர்.இதை எதற்கு கூறுகிறேன் என்றால், நாம் செலுத்தும் வரி வாயிலாகத்தான் நாட்டின் முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு சொத்தை அழிப்பது, நம் சொத்தை அழிப்பது போன்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "என்று அவர் கூறினார்.