"ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தை கொரோனா பலருக்கு உணர்த்தியுள்ளது" - பிரதமர் மோடி!
By : Parthasarathy
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 'கோ-வின்' (CO-WIN) என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பெயர் பதிவு செய்யும் வசதியும், தடுப்பூசி கையிருப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வலைத்தளத்தில் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்துக் கொள்ளவும், மேலும் அந்த முன்பதிவை நீக்கும் வசதியும் உள்ளது. அதே போல் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு இருக்கையில் இந்த கோ-வின் இணையதளத்தை கொரோனா தொடர்பான செயல்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆர்வம் காட்டி வந்தனர். எனவே கோ-வின் இணையதளத்தின் பயன்பாட்டை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க பாரத பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் கோ-வின் உலகளாவிய மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உலகம் முழுவதும் கோவின் இணயதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி பேசுகையில் "இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதள பயன்பாடு உலகத்திற்காக திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது.
துவக்கத்தில் இருந்தே, எங்கள் தடுப்பூசி மூலோபாயத்தைத் திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியாவில் முடிவு செய்தோம். கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டமும், தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும். ஒவ்வொரு கொரோனா தடுப்பூசி டோசும் கண்காணிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
உலகம் முழுவதும், கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையிலான தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாடும், அந்த நாடு எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், இது போன்ற ஒரு சவாலை தனிமையில் தீர்க்க முடியாது என்பதை இந்த அனுபவம் வெளிகாட்டியுள்ளது.
இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை இந்த கொரோனா நோய் பலருக்கு உணர்த்தியுள்ளது. பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே." இவ்வாறு அவர் பேசினார்.