மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை - கல்வி முறையில் புரட்சியை உண்டாக்கும் மத்திய அரசின் திட்டம்!

மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்துக் கொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டத்தை (நிபுண் பாரத்) மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அப்போது, 3 முதல் 9 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை நிபுண் பாரத் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடிப்படை மொழியறிவு, எண்ணறிவு மற்றும் எழுத்தறிவுக்காக ஒவ்வொரு குழந்தை மீதும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் சிறந்த படிப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களாக குழந்தைகள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். கல்வி கற்பதை முழுமையான, ஒருங்கிணைந்த, மகிழ்ச்சியான மற்றும் ஈடுபாடு நிறைந்த அனுபவமாக மாற்றுவது நிபுண் பாரத்தின் லட்சியம் என்று கூறினார்.
அடிப்படை அளவில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2021 - 2022-ஆம் ஆண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ₹2,688.18 கோடி ரூபாய் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசத்தை கட்டமைப்பதில் தரமான கல்வி முக்கிய பங்காற்றுவதாகவும், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு அதன் மிக முக்கிய அங்கமாக திகழ்வதாகவும் கூறினார். இத்திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வி குறித்த எண்ணம் வரும் காலங்களில் மாறி 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கூறினார்.