வன வளங்களை நிர்வகிப்பதில் இனி பழங்குடியினருக்கே முன்னுரிமை - மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

வன வளங்களை நிர்வகிப்பதில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூட்டாக முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டறிக்கை, வன உரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பானது ஆகும். வன உரிமைகள் சட்டம் 2006ன் கீழ் 2018 ஜனவரி 30 வரை 20 மாநிலங்களில் இருந்து 1,39,266 சமூக வன உரிமை கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 64,328 அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மத்திய பிரதேசம் அதிகபட்சமாக 39,419 சமூக கோரிக்கைகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கர் 27,548 கோரிக்கைகளைப் பெற்றுள்ளன.
இமாச்சல பிரதேசம் குறைந்த அளவிலாக 68 சமூக வன உரிமைக் கோரிக்கைகளை பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக திரிபுரா (277), கோவா (372) மற்றும் ராஜஸ்தான் (700) உள்ளன.
சமூக வன உரிமை கோரிக்கைகள் எதையும் பெறவில்லை என பீஹார் மற்றும் உத்தராகண்ட் கூறியுள்ளது. மத்திய பிரதேசம் அதிகபட்சமாக 27,725 கோரிக்கைகளை அங்கீகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கர் (14161) ஒடிசா (5964) மற்றும் மகாராஷ்டிரா (5748) உள்ளன. வன உரிமைகள் சட்டம் குறித்து விழிப்புணர்வு இருப்பதுடன் கோரிக்கைகள் நாடு முழுவதிலுமிருந்தும் பெறப்படுகின்றன. சமூக கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது உட்பட வன உரிமைகள் சட்டத்தை விரைவாக நடைமுறை படுத்தப்படுவதை ஊக்குவிக்க பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.