'விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் அரசியல் உள்ளது' : ஹரியானா முதல்வர்!
By : Parthasarathy
மத்திய அரசு விவாசியிகளின் நலன்களுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.
மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் எந்த விதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாரதீய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் சாதுனி செய்தியாளர்களிடம் கூறும்போது "மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறும்போது " புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று குர்ணம் சிங் சாதுனி கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் அரசியல் உள்ளது, என்று நாங்களும் அதே தான் கூறி வருகிறோம்.
தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் ஆனது, அரசியலில் ஈர்ப்புகளை உருவாக்கி வருகிறது. அது மட்டுமின்றி குர்ணம் சிங் சாதுனிக்கு அவருடன் சேர்ந்து போராடி வரும் விவசாயிகளை பற்றி கவலை இல்லை" என்று ஹரியானா முதலமைச்சர் கூறினார்.