தற்சார்பு இந்தியா திட்டத்தில் ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள் - விமானத் துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்!

இந்திய விமானத் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக குஜராத் கிப்ட் சிட்டியைச் சேர்ந்த விமான ஏல நிறுவனம், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முதல் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த விமான ஒப்பந்தம், இந்திய விமானப் போக்குவரத்து துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் லாபகரமான விமான ஏல மற்றும் நிதி வணிகத்தை ஊக்குவிக்க கடந்த 4 - 5 ஆண்டுகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
விமான ஏலம் இந்தியாவுக்கு புதிதாக வரும் வணிகம். தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி இதனை வளர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா கூறியுள்ளார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் ஏராளமான சலுகைகள் மற்றும் குறைந்த செலவில் தொழில் தொடங்கும் சூழல் காரணமாக குஜராத் கிப்ட் சிட்டி ஏல நிறுவனங்களைக் கவர்கிறது.
இந்நிறுவனங்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேகமாக வளர்ந்து வரும் பயணிகள் விமானப் போக்குவரத்து துறை மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்து துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழிலை வளர்க்க முடியும்.