வேளாண் சட்டம் குறித்து விவாதம் நடத்த தயார் - மத்திய வேளாண் அமைச்சர்!
By : Parthasarathy
மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள எல்லை பகுதியில் எட்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு, 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களுடன் ஒரு சுமூக தீர்வு ஏற்படவில்லை.
இந்த விவசாய அமைப்புகளின் போராட்டம் குறித்து மத்திய விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில் "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விவசாய சங்கங்கள் கைவிட்டு, மாறாக இந்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை ரத்தாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
விவசாயிகள் போராட்டத்தை துவக்கிய பின், விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாய உற்பத்தி சந்தை குழு (APMC) என்பது காலாவதியாகாது. மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த APMC குழுவை விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்றவும் உறுதி பூண்டுள்ளார்." இவ்வாறு அவர் கூறினார்.