இயற்கையை ரசித்திடும் வகையில் விஸ்டாடோம் ரயில் சேவை: தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

By : Bharathi Latha
இந்தியாவில் சுற்றுலா பயணிகளை பெருமளவு கவருவதற்காக ரயில்வே துறை பல்வேறு சிறப்பான அம்சங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது, ரயில் பயணிகள் இயற்கையை ரசிக்கும் விதமாக விஸ்டாடோம் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே இந்திய மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதோடு மலைப் பிரதேசங்களில் ரயிலில் பயணிக்கும்போது பயணிகள் இயற்கையை ரசிக்கும் நோக்கில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்டவற்றை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
மேலும், சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், விஸ்டாடோம் கம்பார்ட்மெண்ட் சேவையை தென்மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது. இந்தப் கம்பார்ட்மெண்ட் 2 பக்கவாட்டிலும், கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அதனால், பயணிகள் இயற்கையை வெகுவாக ரசிக்க முடியும். இந்த, விஸ்டாடோம் கம்பார்ட்மெண்டில் உஉள்ள அனைத்து இருக்கைகளும் 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்தைத் தடுப்பதற்கான வசதிகள், கண்காணிப்பு கேமரா, LED திரை, மொபைல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், GPS கருவி உள்ளிட்டவை விஸ்டாடோமில் உள்ளன.
முதல்கட்டமாக பெங்களூருவிலிருந்து மங்களூரு வரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் நேற்று தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது. சுற்றுலா வழித்தடங்களில் இதேபோல் மேலும் பல ரயில்களில் இந்த வகையான சிறப்பம்சங்கள் இணைக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க சிறிய அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
