'பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த அல் - குவைதாவை சேர்ந்த மூன்று பேர் கைது.' காவல் துறை அதிரடி!
By : Parthasarathy
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த, 11 ஆம் தேதி பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்திய சோதனையில் அல் - குவைதா இயக்க பயங்கரவாதிகள் மினாஷ் அகமது மற்றும் முசரூதீன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் மாநிலத்தின் சில பகுதிகளில் மனித வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாத செயல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கைது செய்த இருவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஷகீல்,முகமது மொய்தீன்,முகமது முஸ்திகீம் ஆகிய மூன்று பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து உத்தர பிரதேச கூடுதல் காவல் இயக்குனர் பிரஷாந்த் குமார் கூறுகையில் " கடந்த ஜூலை 11 ஆம் தேதி கைது செய்த இருவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவர்களிடம் தொடர்புடைய மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளோம். இது குறித்து அந்த மூன்று நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் அந்த கும்பலிடம் அவர்களுக்கு தொடர்பு இருப்பதையும் ஒப்பு கொண்டனர்.
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத செயல்களை நடத்துவது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்தது. இந்த செயல்கள் மூலமாக சமூகத்தில் பல உயிர்களை கொலை செய்வது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற திட்டங்கள் வைத்திருந்தனர். இவர்கள் கூடிய விரைவில் நீதிமன்றம் முன்பு ஒப்படைக்க படுவர்." என்று அவர் கூறினார்.