விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை உறுதி!

By : Bharathi Latha
கடந்த ஒன்றரை வருடங்களாக குழந்தைகள் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் தங்களுடைய கல்விகளையும் ஆன்லைன் மூலமாக பெற வேண்டி ஒரு நிலைமை இன்னும் இருந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் வெளியில் செய்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள். தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே அவர்கள் வெளி இடங்களுக்கு செல்வதில் சிறிது பாதுகாப்பும் உறுதியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் குழந்தைகளுக்கு பொறுத்தவரை இன்னும் தடுப்பூசி இறுதி கட்டத்தில் தான் இருக்கிறது. எனவே அந்த கட்டத்தில் அது தேர்ச்சி அடைந்தால் மட்டும் தான், குழந்தைகளுக்கு அதைச் செலுத்தும் அடுத்த கட்ட பணிகள் நடைபெறும். அந்த வகையில் தற்போது அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தியா குப்தா என்ற 12 வயது சிறுமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி T.N.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதார துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட வகையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குழந்தைகளுக்கு செலுத்தும் இதற்கான அனுமதியும் தற்பொழுது கோரப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு அனுமதி கிடைத்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
