பக்ரீத்துக்கு தளர்வு - கேரள கம்யூனிஸ்ட் அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
By : Parthasarathy
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்க படுகிறது. இவ்வாறு இருக்கையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் மட்டும் ஜூலை 18 - 20 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கொரோனா பாதித்த மூன்று மண்டலங்களில் ஜவுளி கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது "நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி போன்ற மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 0.02 மற்றும் 0.07 சதவீதம் தான் உள்ளது, ஆனால் அந்த மாநில அரசுகள் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக நடந்து வந்த கன்வெர் யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது. மிகவும் குறையாவன கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்கள் கூட பாரம்பரியமான திருவிழாக்களை ரத்து செய்து வரும் நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக பக்ரீத் பண்டிகையின் போது கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்வுடன் கேரள அரசு விளையாடுகிறது. எனவே மக்களின் நலனுக்காக பினராயி விஜயன் இந்த ஊரடங்கு தளர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் இந்த தளர்வுகள் மற்றும் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம் உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அமர்வு உத்தரவிட்டுள்ளது.