அமைச்சர் கையில் இருந்த அறிக்கையை கிழித்த திரிணாமுல் எம்.பி - அதிரடி நடவடிக்கை!
By : Parthasarathy
இந்தியாவில் மழைக்கால கூட்ட தொடர் தொடங்கவிருக்கும் முந்தின நாள் குறிப்பிட்ட பத்திரிக்கையில், பெகாசஸ் (pegasus) மென்பொருள் மூலம் இந்திய அரசு சில முக்கிய நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டுள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியானதை கண்டு மழைக்கால கூட்ட தொடர் முதல் நாளிலிருந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ராஜ்ய சபாவில் இந்த 'பெகாசஸ்' விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்க துவங்கினார். அப்போது அமைச்சர் வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பறித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. ஷாந்தனு சென், அதை சுக்கு நுாறாக கிழித்து எறிந்தார். இதனை அடுத்து இவருடன் மேலும் சில திரிணமுல் எம்.பி-க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியின் இது போன்ற கீழ்த்தரமான செயலை கண்டு பாராளுமன்றம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் இந்த செயல் தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் "மேற்கு வங்கத்தில் திரிணமூல் சங்கிரஸ் கட்சி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. அதே போன்ற வன்முறை கலாச்சாரத்தை பாராளுமன்றத்திலும் திரிணமூல் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இது போன்ற கீழ்த்தரமான செயலை செய்த அவர்கள் வருங்கால தலைமுறைக்கு என்ன தகவலை தெரிவிக்க போகிறார்." என்று அமைச்சர் கூறினார்.
ராஜ்ய சபா தலைவரான, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இது குறித்து கூறுகையில் "அவையில் நடந்த நிகழ்வுகள் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழிக்கும் அளவுக்கு அவை நடவடிக்கைகள் தரம் தாழ்ந்து போனது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற நடவடிக்கைகள் நமது பாராளுமன்றத்தின் ஜனநாயகம் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல். இதன் காரணமாக அமைச்சர் ஷாந்தனு சென் அவர்களை ராஜ்யசபாவில் இருந்த இடைநீக்கம் செய்கிறேன், மேலும் அவர் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது." என்று கூறினார்.