பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஜாக்பாட் : இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!
By : Bharathi Latha
ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் வீரர்களுக்கு பின்னால் அவர்களின் பயிற்சியாளர்கள் மிகப்பெரிய தியாகம் அடங்கியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர், விராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். பளுதூக்குதல், மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்பட சில முக்கிய விளையாட்டுக்களில் இந்தியர்கள் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போல இந்த முறையும் பல மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது.
முதல் நாளான நேற்று இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியது. பளுதூக்குதலில் 49 கிலோ எடைபிரிவில் மீராபாய் வெள்ளி வென்று அசத்தினார். இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இது அனைவருக்குமே வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கிறது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுக்கும் பரிசுத் தொகை அளிக்கப்படும். இது அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளருக்கு ரூ.12.5 லட்சமும், வெள்ளி வென்றால் ரூ.10 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.7.5 லட்சமும் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், வெள்ளி வென்ற மீராபாயின் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.