உலக மல்யுத்த போட்டியில் இந்தியா முதலிடம்: தங்கப்பதக்கத்தை வென்று சாதனை!

By : Bharathi Latha
இந்தியர்கள் பல்வேறு போட்டிகளில் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களும் தற்போது இந்தியாவிற்கான பதக்கத்தை வாங்குவதில் தங்களுடைய முழு முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நடைபெறும் பல போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனையுடன் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் சாதுர்யமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். எனவே பெண்களும் மல்யுத்தப் போட்டிகளில் தாராளமாக ஈடுபடலாம் என்பதற்கு உதாரணமாக இவருடைய வெற்றி காணப்படுகிறது.
தற்போது இந்த போட்டியில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். முன்னதாக 43 கிலோ எடைப்பிரிவில் தன்னு தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதலில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்ததை தொடர்ந்து, தற்போது பிரியா மாலிக்கும், தன்னும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
