Kathir News
Begin typing your search above and press return to search.

"சத்குருவின் பயணம் பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது" - பிரதமர் மோடி பெருமிதம்!

சத்குருவின் பயணம் பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jun 2022 12:17 PM GMT

புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'மண் காப்போம்' இயக்கத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இவ்வியக்கம் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றும் என கூறிய அவர், சத்குருவின் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் குறித்து பேசுகையில், "சத்குரு மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மிகவும் கடினமானது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இந்தப் பயணத்தின் மூலம் உலகளவில் மண்ணின் மீதான அன்பு அதிகரித்துள்ளது. மேலும், பாரத மண்ணின் வலிமையையும் இந்தப் பயணம் உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது" என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், அரங்கு முழுவதும் அரசியல் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என நிரம்பி இருந்தது.

முன்னதாக, சத்குரு பேசுகையில், "நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது போன்ற எல்லாவற்றிற்கும் மண் வளத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த நீண்ட கால முன்னெடுப்பில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பங்கெடுக்க வேண்டும். மக்கள் குரல் கொடுத்தால் தான் அரசாங்கங்கள் இதுபோன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த முன்வரும்" என்றார்.

மண் வளத்தை மீட்டெடுக்கும் இம்முயற்சியில் பிரதமர் மோடி அவர்கள் முழு ஆதரவு அளித்து பல்வேறு வளர்ச்சி படிகளை எடுக்க வேண்டும் எனவும் சத்குரு வேண்டுகோள் வைத்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமரை சந்தித்து 'மண் காப்போம்' இயக்கத்தின் கொள்கை விளக்க கையேட்டினையும் வழங்கினார். மண் வளத்தை மீட்டெடுக்க அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறைகள் மற்றும் அறிவியல் தீர்வுகள் அந்த கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களை இவ்வியக்கம் சென்றடைந்துள்ளது. அத்துடன், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 15 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

3 நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு

இது தவிர, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு சாதனை படைத்துள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாரத்தான், வாக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மண் வள விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News