கார்பரேட் நிறுவனமாக இருந்தாலும் கரிசனம் கிடையாது: அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல் மீது மத்திய அரசு காட்டிய அதிரடி!
By : Kathir Webdesk
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காரில் பயணம் செய்வோர், சீட் பெல்ட் அணிய தவறும் பட்சத்தில் அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.
ஆனால் இந்த அலார எச்சரிக்கையை தங்களுக்கு தொந்தரவாக கருதும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல். ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்கள், சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் 13,118 கிளிப்புகளை இதுவரை விற்பனை செய்துள்ளன.
இதனை வாங்கி பயன்படுத்தியவர்கள் பலர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துள்ளன.
இதன் அடிப்படையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு வந்த புகார்களை கருத்தில் கொண்டு தற்போது ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021-ம் ஆண்டு 16,000-த்திற்கும் மேற்பட்டோர் சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8,438 ஓட்டுநர்களும், 7,959 பயணிகளும் அடங்குவர். 39,231 பேர் காயமடைந்துள்ளனர்., அவர்களில் 16,416 பேர் ஓட்டுநர்கள் ஆவர். சாலை விபத்தில் சிக்கியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை தயாரித்த உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
Input From: Live mint