இந்தியா அமெரிக்கா இடையே தொழில்நுட்ப பங்கு... அடுத்த கட்ட பேச்சு வார்த்தை..
இந்தியா-அமெரிக்கா இடையே உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு.
By : Bharathi Latha
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் பங்கேற்றனர். இந்நிகழ்வை அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோ ஒருங்கிணைத்தார். இதில் இந்திய, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் முன்னணித் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு', 'மனிதகுலத்திற்கான உற்பத்தி' என்பதில் கவனம் செலுத்துவது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆய்வுசெய்ய இரு தலைவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. தங்களின் குடிமக்கள் மற்றும் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை செயல்படுத்துவதில் இந்தியா-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பங்கு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின.
இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பில் இந்தியா மேற்கொண்ட முன்னேற்றங்கள் என்பதுடன் உலகளாவிய ஒத்துழைப்புகளைக் கட்டமைக்க, இரண்டு தொழில்நுட்ப சூழல் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பயன் படுத்துவதற்குரிய மகத்தான திறனைப் பிரதமர் தமது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார். புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
Input & Image courtesy: News