எகுறும் தக்காளி விலை.. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு..
By : Bharathi Latha
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்ய நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவு. கடந்த மாதம் தக்காளியின் சில்லறை விலை அதிகபட்சமாக இருந்த முக்கிய பயன்பாட்டு மையங்களில் விநியோகிப்பதற்காக, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் மண்டிகளிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அளவில் தில்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நுகர்வோருக்கு சில்லறை விற்பனையகங்கள் வாயிலாக சலுகை விலையில் தக்காளி விநியோகிக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் தேசிய சராசரி அளவைவிட கூடுதலான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட மையங்களின் அடிப்படையில் இந்த தேர்வு அமைந்துள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த உற்பத்தியில் 56 சதவீதம் முதல் 58சதவீதம் பங்களிப்பை தெற்கு மற்றும் மேற்கு இந்தியா வழங்குகிறது. அதிக மாநிலங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதிகள், உற்பத்தி பருவகாலத்தின் அடிப்படையில் இதர சந்தைகளுக்கும் தங்கள் விளைப் பொருளை அனுப்புகின்றன.
அதிகபட்ச சாகுபடி டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். தக்காளியைப் பொறுத்தவரை ஜூலை- ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகிய காலகட்டங்களில் பொதுவாக குறைந்த உற்பத்தியே காணப்படுகிறது. பருவமழை காலம் என்பதால் ஜூலை மாதத்தில் விநியோகம் சம்பந்தமான சவால்களும், அதனால் விலை உயர்வும் ஏற்படுகிறது. வரும் நாட்களில் நாசிக், அவுரங்காபாத், மத்திய பிரதேசத்தில் இருந்து கூடுதல் தக்காளிகள் அனுப்பப்படவிருப்பதால் கூடிய விரைவில் தக்காளி விலை குறையுமென்று எதிர்பார்க்கப் படுகிறது.
Input & Image courtesy:News