இந்தியா-அமெரிக்க இடையிலான நிதி ஆலோசனை.. அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் பொருளாதாரம்..
By : Bharathi Latha
இந்தியாவின் நிதி அமைச்சகம் மற்றும் அமெரிக்கக் கருவூலத் துறையின் மூத்த அதிகாரிகள் புதுதில்லியில் நடத்திய இந்திய-அமெரிக்க 9-வது அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது துணை அமைச்சர்கள் கூட்டத்தில் சந்தித்தனர். பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மை சந்திப்பு 2022 நவம்பரில் நடைபெற்றது. இந்திய தூதுக்குழுவிற்கு பிரதம பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.அனந்த நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். அமெரிக்க தூதுக்குழுவிற்கு சர்வதேச நிதித்துறை துணை அமைச்சர் பிரென்ட் நெய்மன் தலைமை தாங்கினார். இந்திய ரிசர்வ் வங்கி, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர். பேச்சு வார்த்தை பயனுள்ளதாக இருந்தது. இந்தியா-அமெரிக்கா பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மையின் அடுத்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்குத் தயாராக இது உதவும்.
இரு நாடுகளின் பொருளாதார கண்ணோட்டம், உலகளாவிய கடன் சவால்களை சரி செய்வதில் இந்திய மற்றும் அமெரிக்க முன்னுரிமைகள், தூய்மையான எரிசக்தி மாற்றத்தை முன்னெடுப்பதற்கும் பருவநிலை நிதியைத் திரட்டுவதற்கும் கூட்டு முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த புதிய முதலீட்டுத் தளங்களை உருவாக்குவதில் முன்னேற்றம்,
எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகள் குறித்து இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விவாதித்தனர். இரு தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடரவும் 2023 ஜூன் மாதம் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் இடையே நடந்த வெற்றிகரமான சந்திப்புகளின் அடிப்படையில் அதனைக் கட்டமைக்கவும் ஒப்புக்கொண்டனர்.
Input & Image courtesy: News