பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம்.. மேலும் விரிவு படுத்த அமைச்சரவை ஒப்புதல்..
By : Bharathi Latha
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். அடுத்த 3 ஆண்டுகளில் 75 லட்சம் கூடுதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் பி.எம்.யு.ஒய் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளை வழங்குவதன் மூலம் பி.எம்.யு.ஒய் எனப்படும் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும். இந்தத் திட்டத்தில் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 200 வீதம் 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது. நாட்டில் 2014-ம் ஆண்டு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வோர் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் விரிவு படுத்துவதற்கான காரணம், சுத்தமான எரிபொருளில் சமைப்பதன் மூலம் பெண்களின் வாழ்க்கை எளிதாகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகளவில் சுமார் 2.4 பில்லியன் மக்கள் மண்ணெண்ணெய், பயோமாஸ் மற்றும் விறகுகளை பயன்படுத்தும் அடுப்புகளை சமையலுக்கு நம்பியுள்ளனர். இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. மாசு இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சமையல் மூலமான காற்று மாசுபாடு பிரச்சினையை நிவர்த்தி செய்யவும் பிரதமரின் உஜ்வாலாத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில், இந்தியாவில் உள்ள ஏழை மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், விறகு, நிலக்கரி மற்றும் சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தினர். இதனால், அவர்கள் சுகாதார பிரச்னைகளையும் எதிர்கொண்டனர். இந்நிலையில், பிரதமரின் உஜ்வாலாத் திட்டம் பெண்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டியுள்ளது. மேலும், உஜ்வாலா திட்டம் பெண்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
Input & Image courtesy: News