அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகத்து வருகிறது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவானது. மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கேபினட் செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது.