கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 10-வது P-8I போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு!
By : Parthasarathy
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு P-8I போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் முதல் P-8I போர் விமானம் கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
அதே போல் மீதமுள்ள ஏழு விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கான பயன்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.
இந்த போர் விமானங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்ததை அடுத்து மேலும், கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டில் போயிங் நிறுவனமிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது . அந்த ஒப்பந்தம் படி 9-வது P-8I போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது 10-வது P-8I போர் விமானமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது, 10-வது P-8I போர் விமானமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான போர் விமானங்கள் கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடா் மீட்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும் அந்த நிறுவனமே வழங்கி வருகிறது." என்று அதில் குறிப்பிட்டுள்ளது.