இந்தியாவில் 11 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு!
By : Kathir Webdesk
இந்தியாவில் கிராமப்புறங்களைச்சேர்ந்த 11 கோடி வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளன. 123 மாவட்டங்களில், 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் என்னும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளில் பல்வேறு இடையூறுகளுக்கிடையிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடையறாத உழைப்பு காரணமாக ஒவ்வொரு கிராமப்புற வீடும் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஜல்ஜீவன் இயக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இது தொடங்கப்பட்டது.
2019ம் ஆண்டு இந்தத் திட்டம் துவக்கப்பட்டப்போது, 19.35 கோடி கிராமப்புற வீடுகளில், 3.23 கோடி (16.72%) வீடுகள் மட்டுமே குழாய் இணைப்பு பெற்றுள்ளன. 3 ஆண்டுகளில், இந்த குறுகிய காலத்தில் இந்த இயக்கம் வாழ்க்கையை மாற்றியுள்ளது. 11 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகள் (56.8%) தற்போது குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ளன.
இந்த சாதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஜல்ஜீவன் இயக்கத்தை ஜல்சக்தித்துறை அமைச்சகம் இந்த சாதனையை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கிராமப்பகுதிகளைச்சேர்ந்த 11 கோடி வீடுகளில் இன்று குழாய் மூலம் குடிநீர் விநியோகம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கோவா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டையு-டாமன், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி ஆகிய நான்கு யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 16 மாநிலங்களின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
Input From: NewsonAir