Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து: மனித குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம் பிரார்த்தனை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து:  மனித குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம் பிரார்த்தனை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Feb 2022 6:56 AM IST

"நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்" என பிரதமர் மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

புனிதமான மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மஹாசிவராத்திரி விழா அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நம்முடைய மனம், உடல் மற்றும் புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனில் இருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்.

மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் நீங்கள் எடுத்து வரும் அயராத முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மறுமலர்ச்சி என பன்முக திட்டங்களை நீங்கள் முன்னெடுத்து செய்துவருகிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்த மஹாசிவராத்திரி விழா, மனிதகுலம் தனது அறியாமையில் இருந்தும், இருளில் இருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளை பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.




இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆதியோகியில் நடக்கும் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எங்களது நன்றிகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈஷா மஹாசிவராத்திரி விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம் வழியாக 170 நாடுகளில் இருந்து சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் பார்வையை கவர்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News