Kathir News
Begin typing your search above and press return to search.

உங்களுக்குள் ஞான ஒளி ஏற்றி வாழ்வை ஆனந்தமாக்குங்கள்! மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு விருப்பம்!

உங்களுக்குள் ஞான ஒளி ஏற்றி வாழ்வை ஆனந்தமாக்குங்கள்! மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு விருப்பம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 March 2022 9:28 AM IST

'உங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய ஞான ஒளியை ஏற்றி வாழ்வை ஆனந்தமயமனதாக மாற்றிக்காட்டுங்கள்' என்று ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு கூறினார்.

ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் 170 நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்றனர். மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா, கோவா முதலமைச்சர் திரு. பிரமோத் சாவந்த், புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு.நமச்சிவாயம் இந்தியாவுக்கான கொலம்பியா நாட்டு தூதர் திருமதி. மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர்.

விழாவில் சத்குரு பேசியதாவது:

ஒரு வருடத்தில் 13 சிவராத்திரிகள் உள்ளன. அதில் மஹாசிவராத்திரியானது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பினால், நம்முள் உள்ள உயிர்சக்தி இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். ஆகவே, இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருந்தால் மகத்தான நன்மைகளை பெற முடியும்.

உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் செய்யும் உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். ஆகவே, உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மஹாசிவராத்திரி நாளில் ஏற்றி விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பணம், சொத்து வைத்துள்ளீர்கள் என்பது வாழ்வின் சிறப்பை தீர்மானிக்காது. எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் முழுமையான தெம்புடன் வாழ்கிறீர்கள் என்பது தான் உங்கள் வாழ்வின் தரத்தை தீர்மானிக்கும். ஆகவே, உங்கள் உயிர் சக்தியை தெம்பாக்கி வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றி காட்டுங்கள். கொரோனா பெருந்தொற்றால் இழந்த உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுப்போம்.

இவ்வாறு சத்குரு கூறினார்.

இவ்விழா தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பெண் தன்மையின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக திகழும் லிங்க பைரவியின் மஹா யாத்திரை நடைபெற்றது. பின்னர், ஆதியோகி முன்பு 'மஹா யோக யக்னா' வேள்வியை சத்குரு ஏற்றி வைத்தார். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் யோக விஞ்ஞானத்தை பரிமாறுவதற்கான உறுதியை இந்த வேள்வி குறிக்கிறது.

மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருக்கும் விதமாக, பல்வேறு மாநில கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகர் திரு. ஷான் ரோல்டன், அசாம் மாநில பாடகர் திரு.பப்பான், தெலுங்கு பாடகி திருமதி.மங்கலி, பாலிவுட் பாடகர் திரு.மாஸ்டர் சலீம், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் திரு.ஹன்ஸ்ராஜ் ரகுவன்சி ஆகியோர் சிவனை போற்றி பாடல்கள் பாடி அரங்கை அதிர செய்தனர். அவர்களுடன் ஈஷாவின் சொந்த இசை குழுவான 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவும்' ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணித்தனர். வண்ணமயமாக நடந்த ஆதியோகி திவ்ய தரிசன 3 டி ஒலி, ஒளி காட்சி பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது.

நள்ளிரவு மற்றும் பிரம்ம முகூர்த்த வேளையில் சத்குரு சக்திவாய்ந்த தியான செயல்முறையை நிகழ்த்தினார். அத்துடன், கோடிக்கணக்கான மக்களுக்கு பிரசாதமாக வழங்கும் ருத்ட்ராட்ச பிரதிஷ்டையையும் சத்குரு மேற்கொண்டார்.

மேலும், ஈஷாவை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட காரணமாக இருக்கும் சத்குருவுக்கு மேடையில் மரியாதை செய்து நன்றி கூறினர். விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News