மாநிலங்கள் கையிருப்பில் 1.70 கோடி தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை!

By : Bharathi Latha
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. இந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். எனவே தடுப்பூசி என்பது மிகப்பெரிய ஆயுதமாக இந்த நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகின்றது என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். ஐ.நாவும் இதை வலியுறுத்தி, குறைந்தபட்சம் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் அடுத்தடுத்து வரும் அலைகளில் இருந்து தங்கள் நாட்டு மக்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் எச்சரித்துள்ளது.
எனவே தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது, மாநிலங்களின் கையிருப்பில் 1.70 கோடி தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது பற்றிக் கூறுகையில், "நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.
அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 38,18,97,610 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதில், 36,48,77,756 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளது .தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 1,73,87,662 கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 23,80,080 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளன என்றும் மத்திய சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
